Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

நான் யார்னு தெரியுதா?

கல்யாணக் கூட்டத்தில்
திடீரென்று ஒருவர்
என் முன்னால் வந்து
"நான் யார்னு தெரியுதா?"
எனக் கேட்க
நான் யோசித்தேன் ...

தூரத்து உறவினரா
தந்தையின் நண்பரா
ரயில் சிநேகிதரா
அரசியல்வாதியா
யார் இவர்?

மரியாதைக்கு
தெரியும் என்று சொன்னால்
"சொல்லுங்க" என்று கேட்டால்
என்ன சொல்வது?

தெரியாது என்று சொன்னால்
"என் போன்ற வேண்டியவனை
இப்படி மறக்கலாமா?" என்று
வருந்தினால் என்ன செய்வது?

"உமக்கே உம்மைத் தெரியாவிட்டால்
என்னை ஏன் கேட்கிறீர்கள்?" என்று
குறும்பாகக் கேட்டுவிடலாமா?

இந்த கண்ணாமூச்சி
விளையாட்டிற்கு
நான் வரவில்லை என்று
நாசூக்காய் எப்படிச் சொல்வது?