காதல் கவிதைகள்
எங்க வீட்டில் தாத்தா
எதுத்த வீட்டில் பாட்டி
இருவருக்கும் வந்திருச்சு
காதல் மறு வாட்டி
கிளவி சுத்த சைவம்
கிளவனார் அசைவம்
மூக்கு மேலே மூக்கு வெரல்
வச்ச அதிசயம்
குத்து கல்லு தாத்தா
பளய கால வாத்தி
ஒண்டிக் கட்டை பாட்டி
அதுக்கு கொள்ளுப் பேத்தி
கிளவனாரு முதலி
கிளவி அது பிள்ளை
இத்துப் போன வயசுலே
ஏன் இந்தத் தொல்லை?
எடக்கு சொல்லைத் தவுத்தா
ஒண்ணு மட்டும் நெசம்
கிணத்துப் பக்கம் கிளவனாரு
பாடுறாரு நெதம்
பல்லைக் களட்டி மூணு வேளை
சலவை செய்யறாரு
சந்தனத்தைப் பூசிக் கிட்டு
ரொம்ப ஒய்யறாரு
வழுக்கு மண்டை நடுப்பாலே
வகுடு தெரியுது
பழுத்த கன்னம் ரெண்டிலுமே
பவுடர் படியுது
தொந்கிப் போன மீசையுமே
தூக்கி நிக்குது
மங்கிப் போன கண்ணு கூட
மினுமினுக்குது
கூனு போட்ட முதுகெலும்பு
செங்குத்தாச்சு
ஊனி நடந்த மூங்கிக்கம்பு
மூலைக்குப் போச்சு
தொவண்டு போன வவுறு
சும்மா பசியெடுக்குது
வறண்டு போன உதடு கூட
விசில் அடிக்குது
கிளவி அது காலையிலே
வாசல் தெளிக்குது
கிளவனாரைப் பாத்துப் புட்டா
ஒடம்பை நெளிக்குது
கலைஞ்சு போன சேலைத்தான்
சரிப் படுத்துது
ஒளிஞ்சு பாத்த எங்களுக்கோ
சிரிப் பெடுக்குது
நெய்யூத்திப் பலகாரம்
ஆக்கி வைக்குது
கையோட தத்தாவுக்கு
அனுப்பி வைக்குது
கிளடு இங்க நாக்குச் சொட்ட
வவுத்தை ரொப்புது
களுவி வச்ச கலசத் திலே
கடிதம் அனுப்புது
குளத் தோரம் சாயங்காலம்
சந்திக் குதுங்க
கண் மறைவா புல்லு மேலே
குந்திக் குதுங்க
மேலும் மேலும் அவங்க காதல்
வளந்து போச்சுங்க
வளந்து போன கிளங்க ரெண்டு
குளந்தை ஆச்சுங்க
சேவக் கோளி கூவும் முன்னே, மச்சான் - நீ
சிட்டுப் போலே வெரஞ்சு போனே, மச்சான்
பாவி வயித்த களுவத் தானே, மச்சான் - நீ
பச்சைத் தண்ணி குடிச்சுப் போனே, மச்சான்
சிறுத்தை போலே பாய்ஞ்சி ருந்தே, மச்சான் - நீ
செருப்பு போலே தேய்ஞ்சு போனே, மச்சான்
பருத்திக் காட்டில் வெடிச்சுப் பூத்த பஞ்சாய் - நீ
அடிச்ச காத்தில் ஆய்ஞ்சு போனே, மச்சான்
கலப்பை யைத்தான் வச்சுப் போடு, மச்சான் - நான்
கம்பங் கஞ்சி கூளு தாரேன், மச்சான்
அலுப்பு தீரக் களுத்தை நீட்டு, மச்சான் - நான்
சுளுக் கெடுத்து சொகுசு தாரேன், மச்சான்
பரிசம் போடப் புருசன் வேணும், மச்சான் - நாமே
சரசம் பேசித் தேதி யாச்சு, மச்சான்
வருசம் ரெண்டு ஓடிப் போச்சு, மச்சான் - உன்
வாச மல்லி வாடிப் போச்சு, மச்சான்
வயசுப் புள்ளே நொந்தி ருக்கு, மச்சான் - உசுர
உனக்கே தான் தந்தி ருக்கு, மச்சான்
மனசு எல்லாம் வெந்தி ருக்கு, மச்சான் - அளுவ
மணிக் கணக்கா வந்தி ருக்கு, மச்சான்
சுருக்குப் பையில் சுருட்டும் பணம், மச்சான் - அந்த
இறுக்கு மாட்டில் இருக்கும் சனம், மச்சான்
நெருப்பு வைச்சுக் கொளுத்தி னாலும், மச்சான்- நீ
வெளிச்சம் ஏத்தும் மெளுகு வத்தி, மச்சான்
குடி இருக்கக் குடிசை போதும், மச்சான் - உன்
மடி இருக்கும் மவுசு போதும், மச்சான்
செடி இடுக்கில் கூடு போதும், மச்சான் - நாமே
சிரிச் சிருக்கும் தோது போதும், மச்சான்
படிக் கட்டு ஓட்டு வீடு வேணாம் - காசு
இடுக் கட்டில் மாட்டிப் போக வேணாம்
குடி கெட்டுக் கூசிப் போக வேணாம் - யாரும்
குறை பட்டு ஏசிப் போக வேணாம்
கறவு மாடு கன்னுக் குட்டி, மச்சான் - நாமே
கணக்குப் பாத்தா அது தானே லட்சம்
வரவு தேடி அலைய வேணாம், மச்சான் - வரட்டு
கவுரவம் தான் அது எந்தப் பட்சம்?
நடை நடக்க ஆத்து மணல் உண்டு - அல்லி
மண மணக்கப் பூத்தி ருக்கு செண்டு
பட படக்க ரெக்கையைத் தான் கொண்டு - மேலே
பறக்குது பார் சோடிப் புறா ரெண்டு
உன் புன்னகை பொன்னுதிர் காலையின் உதிப்பு
உன் பற்களோ பொலிவைர மாலையின் பதிப்பு
உன் கன்னங்கள் சிரித்திடும் மாம்பழக் கதுப்பு
உனைப் பார்த்திடப் பார்த்திட நேத்திரத் திதிப்பு
உன் அழகது ஆச்சரியக் குறியதின் மதிப்பு
உன் அறிவது சிந்தனை நெருப்பதின் கொதிப்பு
உன் புகழது பௌர்ணமி சமுத்திரத் துதிப்பு
நீ பொக்கிஷ உண்டியல் நாணயக் குதிப்பு
உன் குரலிசை இனிமைதான் குயிலினம் அளிப்பு
உன் குடைஇமை சிமிட்டிடும் தாரகை பளிப்பு
உன் உரசலில் தென்றலும் காணுமே களிப்பு
உன் முறுவலின் எதுகையோ வானவில் நெளிப்பு?
உன் நடையது ஒயிலுறும் நதியதன் நடிப்பு
உன் நளினமோ மயிலினம் பழகிடும் படிப்பு
உன் இடையது குறுகிய கிடுக்கையின் ஒடிப்பு
உன் கடைவிழி மன்மதன் கணைதனின் துடிப்பு
உன் மொழியது தமிழ்மலர் தோரணத் தொடுப்பு
உன் குளிர்முகம் மார்கழிப் பனித்திரை உடுப்பு
உன் எழிலது கற்பனைத் தோணியின் துடுப்பு
நீ இல்லாது எரியாது பாவலன் அடுப்பு
காற்றும் பனித் துளியும், பெண்ணே பெண்ணே - ஒன்று
கலந்திடுதல் காண்பாய் நீ, பெண்ணே பெண்ணே - சுனை
ஊற்றும் நதி அண்டி, பெண்ணே பெண்ணே - மிக்க
உவகையுடன் உடல் சேர்க்கும், பெண்ணே பெண்ணே - அந்த
ஆற்றும் சமுத்திரத்தில், பெண்ணே பெண்ணே - அன்பு
சங்கமம்தான் கொள்வது பார், பெண்ணே பெண்ணே - இவை
ஏற்றும் இணைந் தென்ன, பெண்ணே பெண்ணே - இன்று
என்னை நீ இணைந்திடலால், பெண்ணே பெண்ணே!
உலவிவரும் வெண் மேகம், பெண்ணே பெண்ணே - மலை
உச்சிதனை முகர்வது காண், பெண்ணே பெண்ணே - வாச
மலரதனின் இதழ் அப்பி, பெண்ணே பெண்ணே - வண்டு
மொய்ந்தாடி ரீங்கரிக்கும், பெண்ணே பெண்ணே - அங்கு
குலவிவரும் பறவையினம், பெண்ணே பெண்ணே - கொஞ்சி
அலகுகளை சேர்ப்பது பார், பெண்ணே பெண்ணே - முத்தம்
உலகசம நியதி எனில், பெண்ணே பெண்ணே - எனக்கு
ஒன்றும் நீ தந்திடலால் பயன் தான் என்னே?
(ஷெல்லியின் “Love’s Philosophy” மையமாய் வைத்து எழுதியது, நண்பர் ஜெமினி கணேசன் கேட்டதற்காக.)
கிச்சு கிச்சு கிளுகிளுப்பை
மூட்டி வந்தவள் - என்னைத்
தைச்சுப் போட்டு ஊசி மட்டும்
விட்டுச் சென்றவள்
பிறை நிலவாய் முழு நிலவாய்
சிரிப்பு பூத்தவள் - என்
பௌர்ணமியில் அமாவாசை
கரியைச் சேர்த்தவள்
வாலிபத்தை உலர வைத்துப்
பறந்து போனவள் - நல்ல
பாலதனைத் திரள வைத்து
மறந்து போனவள்
கெண்டை, கயல் விழி வரப்பில்
காட்டி நின்றவள் - ஒரு
மீனவனை வலைக்குள்ளே
மாட்டிச் சென்றவள்
பொதியாடும் மணிநெல்லை
உடைத்துப் போட்டவள் - வெறும்
தவிடாக்கி உமித் தூசி
உலர்த்திப் போனவள்
இருள் துலக்கும் மின்மினியை
எடுத்துக் கொண்டவள் - தன்
அகல் விளக்கில் ஈசலாக்கி
எரித்துக் கொன்றவள்
களத்து மேட்டுப் பக்கத்திலே
களச்சுப் போயி நீ இருந்தே
வளச்சுப் போட வந்தேன் நான், செம்பருத்தி - முகத்தை
சுளிச்சு ஏண்டி வச்சுக் கிட்டே துன்புறுத்தி?
வெத்து வேட்டு ஒட்டுக் குள்ளே
விளாம் பழத்து உருண்டை போலே
தத்தளிச்சு நான் இருக்கேன், செல்லக் குட்டி - மனசை
கொத்திக் கிட்டுப் போறியே நீ வெல்லக் கட்டி!
குட்டி போட்ட பூனை போலே
சுத்தி சுத்தி நானும் வாரேன்
முட்டி எல்லாம் வலிக்குதடி, சாத்துக்குடி - என்
சொப்பனத்தை பலிக்க வச்சு ஏத்துக்கடி!
பார்வையிலே மீனை வச்சு
பருவத்திலே தேனை வச்சு
வேர்வையிலே முத்து மாலை செஞ்சுப் புட்டாய் - என்
வாசலுக்கு நீதானே பஞ்சு மிட்டாய்!
உச்சி வெயில் அடிக்குதடி
உடம்பு ரொம்ப துடிக்குதடி
மெச்சி ஒரு பேச்சுப் பேசு, செங்கமலம் - கொஞ்சி
முத்தம் நித்தம் நானும் தாரேன் அங்கமெலாம்!
எச்சிக்கடி கடி கடிச்சு
எனக்கு ஒரு பிடி கொடுத்து
மிச்சத்தைத் தின்னு போடு, கன்னுக் குட்டி - உன்
எச்சி எனக்கு மோட்சமடி பன்னு ரொட்டி!
குடுகுடுப்பை சத்தம் போலே
படுத்துதடி படுத்துதடி
படுக்கையிலே உன் நெனப்பு, பொன்னுரங்கம் - நாமே
பரிசம் போட்டாத்தானே என் கண்ணுறங்கும்!
காய்ந்து போன மொட்டாய்
கலைந்து போன பொட்டாய்
நையிந்து போன பட்டாய்
நயம் பெறாத மெட்டாய்
நோய்ந் திருக்க விட்டாய்
நொடி யுகமாய்ச் சுட்டாய்
வாய் இனிக்கும் மிட்டாய்
நீ வந்து விடு சிட்டாய்!
செல வழித்த சொத்தாய்
சீர ழிந்த வித்தாய்
மலர் பறித்த கொத்தாய்
மன தரிக்கும் பித்தாய்
சிலு சிலுக்கும் மத்தாய்
நீ சிந்தை கலங்க வைத்தாய்
வலு பெருக்கும் சத்தாய்
நீ வா வா வா முத்தாய்!
பாடு குயில் விடிவாய்
பஞ்சு தென்றல் படிவாய்
கூடு நல்ல முடிவாய்
கொஞ்சு தமிழ் வடிவாய்
நாடி இங்கு வருவாய்
நெஞ்சி லின்பம் தருவாய்
கோடி கோடித் திருவாய்
என் களஞ்சியமாய் உருவாய்!
தேன்பலாச் சுளைகள் ஆகத்
தெவிட்டாத இதழ்கள் ஊர
மான்உலா விழிகள் கோர
மகத்தான முறுவல் சேரக்
காண்கிலா தூரம் சென்றாள்
காதலைப் பதித்து வைத்து
வீணுற்ற சிலையாய் நின்றேன்
சிலந்தியின் வலைகள் சூழ!
நாள்பட நாள்பட வருத்தம்
நகருமென்றே நினைத்தேன்
தோள்இரு வைத்தான் கடவுள்
துயரத்தைத் தான் சுமக்க
தாளிலே கவிதை நூறு
தடையின்றி வரவழைத்தான்
பாழ்பட இதையம் வைத்தான்
தாழிடத் தான் மறுத்தான்!
உச்சத்தில் அறிவை வைத்தான்
கச்சத்தில் ஆசை வைத்தான்
பச்சையாய்ப் பாசம் வைக்கும்
பசைநெஞ்சு படைத்து வைத்தான்
மிச்சத்தை மூடி வைத்தான்
மன்மதன் கூட வைத்தான்
நச்செனும் பிரிவை வைத்தான்
நவின்றிடக் கவிதை வைத்தான்!
என் கையில் முத்தமிட்டாய்
உன் அன்பின் அறிமுகமாய்
மெல்ல நான் ரசிக்க ...
என் உச்சிதனை முகர்ந்தாய்
உன் பாசத்தின் அலங்கரிப்பாய்
விழியில் நான் நீர்மல்க ...
என் கன்னத்தில் முத்தமிட்டாய்
உன் காதலின் பிரதிபலிப்பாய்
என் இதையம் கள்ளூர ...
என் இதழோடு இதழ் பதித்தாய்
உன் இச்சையின் முன்னுரையாய்
நான் என்னையே துறக்க ...
ஒருத்தியை நான் உள்ளளவில்
இருத்தி வந்த காரணத்தால்
வருத்தியதோர் காதலெனும் அன்பு - பழஞ்
சரித்திரமாய்ப் போனதடி பின்பு
கள் எனவும் கழை எனவும்
கருமேக மழை எனவும்
புள் எனவும் பாடியதோர் காலம் - இன்று
புளித்து விட்டதே அந்த நாலும்
நெஞ்சகத்திலே உறைந்த
நினைவலைகள் அவள் செய்த
வஞ்சகத்திலே மறையக் கண்டேன் - தன்னை
ஏற்காத மலருக்கோர் வண்டேன்?
துகில் மனத்திலே காதல்
துயரென்னும் நாய் வந்து
சகதியினை மேலப்பிப் பாயும் - காலச்
சலவையிலே அது மறையும் மாயம்
பூஞ்சோலை வனந்தன்னில்
புலம்பி நின்ற குயிலொன்று
வாஞ்சையுடன் தந்ததடி கானம் - வாழ்ந்த
வாழ்வினிலே வந்ததடி ஞானம்