பல்சுவைக் கவிதைகள்
(தினம் ஒரு சமையல் போதும்)
திங்கள்
குற்ற நெஞ்சு குறுகுறுக்கும் அதில்
குறைகள் பல உண்டு - என்னைப்
பெற்றவள் செய்த சமையல் அதில் நான்
பிழைகள் கண்ட துண்டு - ருசி
அற்றுப் போன அமெரிக்கா வாழ்வில்
பற்றே இல்லை யடி - ஒரு
வற்றக் குழம்பு அது போதும் அன்னைக்
கை மணம் அதில் வேணும்!
செவ்வாய்
வட்டப் பஞ்சு இட்லிகள் இரண்டு
வார்த்துத் தர வேணும் - கூடப்
பட்டு முறுகல் காகித தோசை
சுட்டுத் தர வேணும் - அங்குப்
பொட்டுக் கடலை தேங்காய் அரைத்த
சட்டினியும் வேணும் - கை
தொட்டு சாப்பிட சாம்பார் கிண்ணம்
கொட்டித் தர வேணும்!
புதன்
முத்துப் பருக்கை மல்லிகைச் சோற்றைப்
பதமாய் வடித்துவிட்டு - அங்கு
மொத்தப் பசுவெண்ணைக் காய்ச்சி நெய்யின்
மண்டி அகற்றி விட்டு - அடிப்
பித்தம் தெளிந்திடப் பூண்டு ரசத்தினைக்
கத்திப் பொங்க விட்டு - பரி
சுத்த வெள்ளரிப் பச்சடி எல்லாம்
சேர்ந்து வர வேணும்!
வியாழன்
பற்களைக் கூசிப் புளித்திடும் மோர் அதில்
காய்கறித் துண்டங் களை - வெட்டி
நற்பெரு வாசனை சீரகம் வெந்தயம்
யாவும் கொதிக்க விட்டு - சுவை
அற்புதமாய்ப் பெறும் அவியல் அதனை
ஆழக் குழிச் சோற்றில் - ஒரு
சொற்பொருள் மறந்து சாப்பிடும் சுகத்தில்
சொர்க்கம் பெற வேணும்!
வெள்ளி
நீண்ட நடுநிசி நேரத்திலே ஒரு
நிம்மதி இல்லா மல் - சிறைக்
கூண்டு கிளியினைப் போல் நடையோ
குறுக்கும் நெடுக்கு மடி - அங்கு
வேண்டிடும் பாண்டம் என்னவெனில் - அது
வெள்ளையும் கறுநிறமாய் - ருசி
தாண்டிடும் இஞ்சி மிளகாய் கடுகு
தாளித்த தயிர் சாதம்!
சனி
அள்ளித் தமிழ் சிந்தும் மதுரை மாநகர்
ஆங்கொரு பாலகனாய் - நான்
பள்ளிச் செலும்வழி வீதியின் முனையில்
பாட்டி ஒருத்தி உண்டு - தரைக்
கொள்ளி அடுப்பதில் வாணலி மீதினில்
கொண்டு இடும் ஆப்பம் - அவள்
வெள்ளை மனசெனப் பூப்பணியாரம்
வேணும் சுடச் சுடவே!
ஞாயிறு
சுட்டுப் பொசுக்கிற வெயிலிலே பனை
நொங்கும் இளநீரும் - பனிக்
கட்டி நடுக்கிடும் வேளையில் நாயர்
டீக்கடை நுரைக் காப்பி - வயிறு
ஒட்டப் பசித்திடும் நாட்களில் பந்தி
இலை வடை பாயசமும் - நான்
கொட்டி மகிழ்ந்திடவே இவை தான்
கிடைப்ப தில்லை யடி!
(எழுத்தாளர் சுஜாதா 2005-ம் ஆண்டு “எனக்குப் பிடித்த கவிதை” என்ற தலைப்பில் ஆனந்தவிகடனில் இதை விமர்சித்திருக்கிறார்.)
உள்ளே வயிரத்த ஒளிச்சு வச்சு
வெளியே கரித்துண்டா வாள வச்சு
புள்ளே நீ பொளச்சுப் போடினு சொன்னா
புரியலையே உம் பேச்சு, மாரியாத்தா!
பொத்தக் குடிசையில குடியேற வச்சு
பொம்பளைக கூசாம என்னை ஏச வச்சு
ஒத்தச் சேலையில ஒளப்பாட வச்சே
ஒனக்கே அது நியாயமா, மாரியாத்தா?
அப்பனும் இல்ல ஆத்தாளும் இல்ல
அடிச்சுப் போட்டா கேப்பாரும் இல்ல
குப்பையைக் கெளறி குறுணையைப் பொறுக்க
கோளியாநான் நீ சொல்லு, மாரியாத்தா!
ஒத்தரும் இங்க ஒதவாமப் போக
ஒருவாரமா எனக்கு சித்தாளு வேலை
கொத்தனாரு ராயப்பன் கூசாம வந்து
கட்டிலுக்கு வாடீன்னான், மாரியாத்தா!
பொச்சப் பொத்திட்டுப் போவேனு சொன்னேன்
பொசுக்குனு என்கையை ஒருபிடி பிடிச்சான்
மிச்சத்த நெனச்சால கண்ணீரு முண்டுது
மகமாயி, பெரியதாயி, எம் மாரியாத்தா!
ஒத்தக் கை எம்மேல ஒரசிட்ட தால
ரத்தக் கை நான் வெச்சேன், மாரியாத்தா
குத்திக் குதறிக் கூறேடுததுப் போட்டேன்
எங்கப்பன் அருவாளு, மாரியாத்தா!
சவத்தப் பொதச்சிட்டேன், மாரியாத்தா - ரத்த
சேலையையும் அலசிப்புட்டேன், மாரியாத்தா
வெவரங் கெட்டுப் போனாலும், மாரியாத்தா - நான்
வெக்கங் கெட்டுப் போவலையே, மாரியாத்தா!
தள்ளி ஒரு கெணறு உண்டு, மாரியாத்தா - நான்
தூக்குப் போடக் கயிறு உண்டு, மாரியாத்தா
கொள்ளி வெக்க நாதி இல்ல, மாரியாத்தா - என்னைக்
கொன்னாத் தான் லாபம் என்ன, மாரியாத்தா?
கூறுகெட்ட கொத்தனாரு, மாரியாத்தா - என்னைக்
கொலைகாரி ஆக்கிப் புட்டான், மாரியாத்தா
ஊரு விட்டு ஊரு போறேன், மாரியாத்தா - என்னை
உருப்படியா பாத்துக்க, மாரியாத்தா!
வயிரத்த உள்ள வச்ச, மாரியாத்தா - ஒரு
கரித்துண்டா வாள வச்ச, மாரியாத்தா
வயிறெரிஞ்ச வெப்பத்துல, மாரியாத்தா - அந்தக்
கரித்துண்டும் வயிரமாச்சு, மாரியாத்தா!
ஏழெட்டு மாசமா
எங்கூரில் மழையில்ல
யாரு செஞ்ச குத்தமுன்னு
யாருக்குமே தெரியல்ல
ஊருணியும் மணலாச்சு
ஒலந்த மீன் முள்ளாச்சு
தூரெடுத்தும் கெணத்திலே
துளிக்கூடத் தண்ணியில்ல
குடிக்கத் தண்ணியில்ல
குளிக்கத் தண்ணியில்ல
சமைக்கத் தண்ணியில்ல
தொவைக்கத் தண்ணியில்ல
உச்சிமகா காளியம்மன்
கோவிலிலே பூசாரி
நச்சுன்னு ஒடச்ச தேங்கா
ஒண்ணுலயும் தண்ணியில்ல
போரு கொழாய்த் தண்ணி
போட்டுவெச்ச சீமாங்க
மனசிருந்தா வாம்பாங்க
மாறுபட்டாச் சீம்பாங்க
தாகத்தைத் தீத்து வெக்க
இளனியில்ல நொங்குமில்ல
பாவத்தைக் கழுவக் கூட
பச்சைத் தண்ணி எங்குமில்ல
நஞ்சையும் புஞ்சையாச்சு
புஞ்சையும் புழுதியாச்சு
பஞ்சப் பாட்டையெல்லாம்
பத்திரிக்கை எழுதியாச்சு
தேர்தலுக்கு வந்த கட்சி
தேறுதலுக்கு வரவுமில்ல
ஓட்டு வாங்கிப் போனவங்க
ஒத்தாசை தரவுமில்ல
வேலி கொவ்வாக்கொடி
வெக்கையில காஞ்சிருச்சு
காரச் செடி சூரச் செடி
கருமுள்ளாத் தேஞ்சிருச்சு
உசல மரம் புங்க மரம்
மஞ்ச நெத்தி ஈச்ச மரம்
உசிரு போற வெய்யிலில
ஒலகத்த வெறுத்திருச்சு
புரவ ஆட்டுத் தீனிக்கு
புல்லுமில்ல பொதருமில்ல
தொரட்டி எட்டும் தூரத்திலே
மரத்து மேல தழையுமில்ல
முட்டிபோட்டு வால்துடிக்க
முட்டிமுட்டி பால்குடிக்க
குட்டி ஆடு பசி அடக்க
சொட்டுப்பாலும் சொரக்கலயே
முண்டக்கண்ணி சாவலுக்கும்
தொண்டத்தண்ணி வத்திருச்சு
விடிஞ்சாத்தான் என்னவுன்னு
ஒடுங்கியே படுத்திருச்சு
கோவிலுக்கு விட்ட கடா
வதங்கியே வத்தலாச்சு
ஓதிவிட்ட காளைமாடும்
தொவண்டு தொத்தலாச்சு
குறி சொல்லும் சோசியனும்
கடைய அடச்சுப்புட்டான்
கிளி செத்துப் போச்சுன்னு
குமுறி அழுதுப்புட்டான்
கால்ஊனி கால்மடிச்சு
நாலாய் நின்ன கொக்கு
வீசா வாங்கிக் கிட்டு
வெளிநாடு போயிருச்சு
அறுவடைய நம்பித்தான்
நடக்குதுங்க விவசாயம்
பருவமழை தவறிப்புட்டா
குடுத்தனமே கொடைசாயும்
தண்ணிபட்ட பாடாத்தான்
தவிக்குதுங்க இடையபட்டி
வருண கருண பகவானே
வந்திருங்க நடையக்கட்டி
சின்ன ஒரு மாமரம்
முதல் முதலாப் பூக்குது
கிளை எல்லாம் அலங்கரிச்சு
நல்ல மணம் சேக்குது
நாளு மெல்ல நகருது
பூவு எல்லாம் உதிருது
பிஞ்சுக் காம்பு விரலு மேலே
காய்கள் கூட்டம் பெருகுது
பத்து தினம் போகுது
பாவி வெயில் வேகுது
உச்சாணிக் கொப்பு மேலே
ஒத்த மாங்கா பழுக்குது
எச்சி வைக்க எறும்பு வண்டு
எல்லாமே மொய்க்குது
மிச்சக் கிளை மேலே எல்லாம்
பச்சைக் காய்தான் நிக்குது
எட்டு வர்ணப் பட்டுப் பூச்சி
வட்டம் போட்டுப் பாக்குது
பச்சைக் கிளி அணிலும் கூட
போட்டி போட்டு நோக்குது
மாங்கனி தான் சொக்குது
மயக்கத்திலே நிக்குது
நானு ஒரு பெரிய பழம்
ஏனு தன்னை நினைக்குது
காத்து திசையை மாத்துது
கத்தி மரத்தைத் தாக்குது
சுருக்கப் பழுத்த மாம்பழத்தை
உலுக்கிக் குலுக்கி வீழ்த்துது
விழுந்த பழம் வெம்பிப் போயி
விழியை மரத்தில் எறியுது
இலை மறைவில் பல கனிகள்
இருப்பதைத்தான் அறியுது
கவிதைப் பறவையின்
வண்ணச் சிறகுகள்
கற்பனை வானில்
ஓவியம் தீட்டும்
விசைத் தூரிகைகள் ...
கவிதைப் பறவை
சிந்தனைக் கூட்டில்
கற்பனை முட்டை
பொரித்திடும்
கலைக் குஞ்சு ...
கவிதைப் பறவை
பாடிடும் கீதம்
உள்ளத்தாகின்
உணர்ச்சி ஒலிகளின்
அசரீறு ...
கவிதைப் பறவை
கற்பனை மலர்களில்
இலக்கிய அமுதம்
பருகிடும்
தேன்சிட்டு ...
கவிதைப் பறவைகள்
பல்வேறு மனத்திசை
வழி பறந்து
ஒன்றுகூடும்
வேடந்தாங்கலே
காவியம் ...
குட்டையான அலகினோடும்
குருத்துப் போன்ற கொண்டையோடும்
பட்டுச் சொக்காய் இறகினோடும்
பரிதி வண்ணச் சிலிர்ப்பினோடும்
கட்டழகு வால் விசிறி
கருது போலக் காற்றிலாட
பெட்டகமாய் இரு சிறகைப்
பைக்குள்ளே வைத்துக்கொண்டு
நட்டமான கூரை மீது
நடனமாடிக் காட்டிவிட்டுப்
'பட்'டெனச் சிறகடித்துப்
பகட்டாகக் கழுத்தை நீட்டி
அட்டகாசமாகக் கூவி
அனைவரையும் எழுப்பி வைத்துப்
பெட்டைக் கோழி பின்னே சுற்றும்
பெருமை மிக்க சேவலைப் பார்!
அன்பின் அத்தாட்சிக்கு
நீ ஒரு மோதிரவிரல்
நியாய நிதானத்திற்கு
நீ ஒரு நடுவிரல்
கண்ணீரைச் சுண்டிவிட
நீ ஒரு சிறுவிரல்
பண்பினைச் சுட்டிக்காட்ட
நீ ஒரு ஆட்காட்டிவிரல்
ஆழ்ந்த நம்பிக்கைக்கு
நீ ஒரு கட்டைவிரல்
அனைத்தும் கொண்ட கை
நீயே மங்கை ...
ஆணி முனையில்
துவங்கி
இறகு முனையில்
பறந்து
ஈய முனையில்
கரைந்து
பந்து முனையில்
உருண்ட
கவிதை ...
இன்று
விரல் முனையில்
விசைப்பலகையில்
சிறிதுமிருது
சொல்லில்
சேமிக்கப்படுகிறது ...