பூனைக் குட்டிகள்
கழுத்தைக் கவ்விக்கொண்டு
மூன்று பூனைக் குட்டிகளுடன்
பரண்மேல் குடியேறியது
அந்தப் பூனை
சிறுவன் நான்
அந்தப் பூனைக் குட்டிகளோடு
மகிழ்ந்து விளையாடுவேன்
"அது நம்ம வீட்டுப் பூனை இல்லை
கடுவன் பூனை, ஏழு வீடு மாறும்!"
பாட்டி எச்சரித்தாள்
பாட்டி சொன்னது உண்மை
மறு வாரமே அந்தப் பூனையோ
குட்டிகளோ எங்கும் காணவில்லை
எனக்கு ஒரே ஒரு வருத்தம்
எங்கள் வீடு
அந்த ஏழாம் வீடாக
இல்லாமல் போனதே என்று ...