கலைக் கன்னி!
வேண்டாத வேளையில் வந்தி ருந்தே - நீ
வேதங்கள் என்காதில் ஒது கின்றாய்
தூண்டாத தீபத்தைத் தூண்டு கின்றாய் - கலைக்
கன்னிநீ ஏன்என்னைச் சீண்டு கின்றாய்?
நித்திரை எளிதாக வருகு தில்லை - நீ
நிமிடத்தில் கவிதைகள் படைக் கின்றாய்
சித்திர வதைதான் செய் கின்றாய் - என்னை
சில்சில்லாய் தேங்காயாய் உடைக்கின்றாய்!
தேடாத வார்த்தைகள் தேடித் தந்தே - நீ
திணிக்கின்றாய் என்வாயில் தமிழ்ச் சொல்லை
பாடாத பாட்டுக்கள் பாடிட வே - என்னைப்
படுத்திடுவாய் நடுநிசியில் பெருந் தொல்லை
மூடாத கண்கள்தான் மூடு தில்லை - நீ
முகவரிதான் அறியாமல் தட்டு கின்றாய்
வீடேதும் தெரியாமல் என்னில்லம் வந்து - நீ
விதவிதமாய்க் கற்பனைகள் கொட்டு கின்றாய்!
கூடன்றிக் காகத்தின் கூட்டுக் குள்ளே - நீ
குயிலாக வந்துஓர் முட்டை இட்டாய்
பாடறியா ஜீவன்கள் பாட்டுக் கேட்க - உன்
பரிசாகக் குயில்குஞ்சைப் படைத்து விட்டாய்!
குயில்குஞ்சு கூவத்தான் குரல் கொடுத்தாய் - அதன்
குரல்வளையில் இன்னிசையை வரவ ழைத்தாய்
துயில்வதோர் மோட்சமேனச் சொல்லிச் சென்றாய் - என்னைத்
துயிலாமல் குயிலாகப் பாடச் செய்தாய்!