திகைப்பு!
முற்றத்து வெய்யிலிலே
மோகனத் தென்றலிலே
கற்றதை மறக்கச் செய்யும் - ஓர்
கன்னி என் முன்பட்டாள்
இற்றவோர் மர மெனவே
இழந்திட்ட திறமெனவே
வெற்றிட இதயத்தில் தான் - அவள்
விட்டெறிந்தாள் மகிழ்ச்சி!
பட்ட வெளிச்சந் தன்னில்
பவித்திரக் கன்னி அவள்
விட்டலை ஈர்க்கும் அகலாய் - ஓர்
விசேஷ முறுவல் பூத்தாள்
கட்டி அணைத்திடவே பல்நூறு
முத்தங்கள் பிணைத்திடவே
முட்டியும் மோதியு மாய் - ஆசை
மோகமோ பாசமோ தெரியவில்லை!
கொஞ்சு கடல் அலைதான்
பஞ்செனும் கால் தடத்தில்
மிஞ்சு கிளுகிளுப்பை - மீட்டி
மெல்ல நகர்வது போல்
வஞ்சி அவள் அகன்றாள் சுக
வாசனைப் புஷ்ப மென - ஓர்
இஞ்சி தின்ற குரங்காய் நான்
இருந்திருந்தேன் திகைத்து!