Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

அவளே அவளே!

வேய்ந்த கூரை வெயில் ஆற
வீழ்த்தும் நிழலும் அவளே அவளே
காய்ந்த வேளை சாரல் தூவி
வாழ்த்தும் மழையும் அவளே அவளே!

உலர்ந்த நாவில் உணர்ச்சி வார்த்து
உயிர்க்கும் இளநீர் அவளே அவளே
புலர்ந்த நாளில் புனித கீதம்
புனையும் குயிலும் அவளே அவளே!

குழந்தை மழலை கூழாங் கற்கள்
கொஞ்சிப் பேசும் சுனையும் அவளே
விழுந்த இரவில் புன் சிரிக்கும்
விந்தைப் பிறையும் அவளே அவளே!

வியந்த புருவம் விரித்த வில்லில்
விழிகள் வீசும் கணையும் அவளே
சிதைந்து போன இதையம் ஆற
சிகிச்சை மருந்தும் அவளே அவளே!

மயக்க வைக்கும் கவிதை நூறு
மலரச் செய்யும் விதையும் அவளே
இயற்கை அன்னை எடுத்து ஈந்த
ஈர முத்தம் அவளே அவளே!