என்னவள்!
இளநிலவாய் என்னுள்ளே பூத்திருப்பாள்
யாழ் வீணை இசை மீட்டி வீற்றிருப்பாள்
உளந்தன்னில் உவகைகள் சேர்த்திருப்பாள்
உற்சாகத் தமிழ்ச் சொல்லாய் வாய்த்திருப்பாள்
இமைமூட என்விழியில் வசித்திருப்பாள்
இளநீராய் என்நாவில் ருசித்திருப்பாள்
அமையாத கவிதைகள் அமைத்து வைப்பாள்
அடையாத இன்பங்கள் சமைத்து வைப்பாள்
தொலைதூரம் சென்றாலும் அருகே நிற்பாள்
துணையாக மெழுகாக உருகி நிற்பாள்
விலையில்லாக் கற்பனைகள் விட்டுச் செல்வாள்
வீதியிலே நிழல்மரங்கள் நட்டுச் செல்வாள்
இளநெஞ்சில் கசிந்தூறும் ஈரம் வைப்பாள்
இசைதன்னில் பசியாறும் சாரம் வைப்பாள்
புனர்ஜென்மத் தொடர்பாக மோகம் வைப்பாள்
புலனெல்லாம் உணர்வென்னும் வேகம் வைப்பாள்
இரவோடு நடமாடும் விண் மீன்களும்
அலையோடு உறவாடும் முழுத் திங்களும்
கரையோடு விளையாடும் பசுந் தென்றலும்
அவள்போலக் கிடையாது என்றென்றுமே