Mundhanai / முந்தானை
சுப்பைய்யா:
முந்தானையை சொருகிக்கிட்டு
மொகத்தைக் கொஞ்சம் சுளிச்சிக்கிட்டு
தந்தானக்கடி நடையைப் போடும் பொம்பளே
நான் முன்னாலேதான் வந்தா என்ன
கும்மாளம்தான் பண்ணா என்ன
முறைச்சு ஏண்டி அடிக்க வார நம்பளே – நீ
முறைச்சு ஏண்டி அடிக்க வார நம்பளே
முத்தம்மா:
துப்பாக்கியைத் தொலைச்சுப்போட்ட
சிப்பாயிபோல் பதுங்கி வார
டப்பாங்குத்து டொங்கு டொக்கா ஆம்பளே
உன் வண்டவாளம் வேகாதைய்யா
தண்டவாளம் ஏறாதைய்யா
வெட்டிப் பேச்சு எதுக்கு வீணா வம்புலே – உன்
வெட்டிப் பேச்சு எதுக்கு வீணா வம்புலே
சுப்பைய்யா:
மக்காச் சோளம் தின்னு என் அக்கா பெத்த பொண்ணு
ஒட்டியாணம் போலே உன்னைக் கட்டிக்கணும் கண்ணு – நான்
ஒட்டியாணம் போலே உன்னைக் கட்டிக்கணும் கண்ணு
முத்தம்மா:
முக்காத் துட்டு மாமா நீ மக்கர் பண்ணலாமா
சொக்குப் பொடி போட்டு என்னை மயக்க எண்ணலாமா – நீ
சொக்குப் பொடி போட்டு என்னை மயக்க எண்ணலாமா
சுப்பைய்யா:
அந்தி விழும் நேரத்திலே ஒத்த நிலா வானம் மேலே
குத்து விளக்காக நல்லா எரியுது – உன்
முத்துப் பல்லு சிரிப்பு அங்கே தெரியுது
ஓரக்கண்ணு பார்வை என்னை உறுத்துது – என்
உறக்கத்திலே உன் நெனப்பு படுத்துது
முத்தம்மா:
தென்னைமரத் தோப்பினிலே குள்ளநரி ராவு வேளை
கன்னம் வைச்ச கள்ளன் போல களிக்குது – அது
கண்ணுரெண்டும் இருட்டுக்குள்ளே ஜொலிக்குது
கோரைப் புல்லு மேட்டுப் பக்கம் தவ்வுது – நல்ல
நேரம் பார்த்துப் பைங்கிளியைக் கவ்வுது (முந்தானையை ... )
சுப்பைய்யா:
உச்சாணி கொப்புலே உக்காந்தா தப்புலே
அச்சாரம் கொடுத்துப்போடு சத்தமா – உன்
அழகான வாயாலே முத்தமா
முத்தம்மா:
அச்சாணி சக்கரம் அவுந்துப் புட்டா அப்புறம்
சப்பாணி ஆயிறுவே சுப்பைய்யா – நீ
மச்சானா ஆவுறது எப்பைய்யா
சுப்பைய்யா:
அச்சுவெல்ல சக்கரையை மொச்சிருக்கும் எறும்பை மெச்சி
கச்சிதமா பாட்டுப் பாடு கன்னுக் குட்டி – என்
கட்சிக்கொரு ஓட்டுப் போடு பொண்ணுக் குட்டி
பட்டாணி கடலை சுண்டல் முத்தம்மா – நல்ல
பலகாரம் எனக்கு வேணும் மொத்தமா
முத்தம்மா:
வெட்டவெளி வீதியிலே முட்டிதட்டி விழுந்து காயம்
பட்டுக்கிட்ட குதிரைபோலே கனைக்கிறே – நீ
எட்டுக்கட்டி எதைஎதையோ நெனைக்கிறே
பட்டிக்காட்டு வில்லுப்பாட்டு சுப்பைய்யா – எனக்கு
கொட்டாவி வந்திடிச்சு இப்பைய்யா (முந்தானையை ... )